Thursday, March 17, 2016

2002 ஆம் ஆண்டு தொடகத்தில் வெளியிட்ட செய்திகள் உலகமெங்கும் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. - இதற்கு புளிட்ஷேர் விருதும் கிடைத்தது...!!



'The Boston Globe' - 1872 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று வரை இடைவிடாது இயங்கிகொண்டிருக்கும் செய்தித்தாள் நிறுவனம். நாளிதழ் மட்டுமல்லாமல், இணையத்திலும் வெற்றிகரமாகப் பயணித்துக்கொண்டிருக்கிறது பாஸ்டன் குளோப். இவர்களது புலனாய்வித் துறையான 'Spotlight' குழுவினர், 2002 ஆம் ஆண்டு தொடகத்தில் வெளியிட்ட செய்திகள் அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகமெங்கும் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. காரணம் அந்தச் செய்திகளில் குற்றம்சுமத்தப்பட்டவர்கள் கதொலிக்கப் பாதிரியார்கள். அவர்கள் செய்ததாக, தொடர்ந்து செய்து வருவதாகச் சொல்லப்பட்ட குற்றம் - சிறுவர்களிடம் பாலியல் வன்கொடுமை. பத்திரிக்கைத்துறையில் உயர்ந்து விருதாகக் கருதப்படும் 'The Pulitser Prize for Public Service' விருது Boston Globe இன் Spotlight பிரிவிற்கு, அவர்களது இந்த 'Sexual Abuse Scandal in the Catholic archiocese of Boston' செய்தித் தொடருக்காக வழங்கப்பட்டது.


Investigative Journalism - இதைக் கேட்டாலே நம்முள் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்வது நிஜம். ஆனால் இதிலுள்ள ஆபத்துகள் ஏராளம். மூன்று மாநிலப் போலீஸார் கண்களிலும் விரலை விட்டு ஆட்டிக்கொண்டிருந்த வீரப்பனை பேட்டி கண்டதோடு மட்டுமல்லாமல், அவரது சமீபத்திய புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டு வந்தார் ஒரு பத்திரிக்கையாளர். சாதாரண ஆட்களால் இது முடியுமா? அதிகாரம் நியமித்த 'அதிகாரிகள்' ஒரு கேஸை விசாரணை செய்வதற்கும், சாமினயரான ஒரு பத்திரிக்கையாளர் ஒரு கேஸை விசாரிப்பதற்கும் இருக்கும் வேறுபாடுகளை உணர்ந்தாலே இதில் இருக்கும் ரிஸ்க் தெரிந்துவிடும். கரணம் தப்பினால் மரணம். 'கழுகு', 'பருந்து', 'கருப்புப்பூனை' என்று எந்தப் பெயரில் மறைந்து எழுதினாலும், 'ஜிகர்தண்டா' சேதுவைப் போன்றவர்கள் தேடிக்கண்டுபிடித்துக் கொளுத்திவிடுவார்கள். ஆனால் இதெல்லாம் பழைய கதை. எனக்குத் தெரிந்து சமீபகாலத்தில் தீவிரமாக இந்தத் தளத்தில் இயங்கும் பத்திரிக்கைகள், பத்திரிக்கையாளர்கள் தமிழகத்தில் வெகு சொற்பமே. இல்லவே இல்லை என்று கூட சொல்லலாம். இணையத்தில் 'சவுக்கு' என்ற வலைபக்கத்தில் சில முக்கிய சமாச்சாரங்களை முடிந்தவரை ஆதாரத்தோடு எழுதுகிறார்கள். எத்தனை பேர் அவர்களது கட்டுரைகளைத் தொடர்ந்து வாசிக்கிறார்கள் என்று தெரியவில்லை. வெகுஜன புலனாய்வுப் பத்திரிக்கைகளான நக்கீரன், ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர் போன்ற பத்திரிக்கைகளும் நாளிதழ்களும் தங்களுக்கான மதிப்பை இழந்து பல வருடங்களாகின்றன. '100 கோடி கைமாறியதாம்', '1000 கோடிக்கு ஏலம் போனதாம்' என்று பொத்தாம் பொதுவாகவே கொளுத்திப்போட்டுவருகிறார்கள். ஆதாரத்துடன் எதையுமே கொடுப்பதில்லை. நக்கீரனுக்கு ஆளுங்கட்சி மேல் இருக்கும் வெறுப்பும், தினமணிக்கு தி.மு.க மேலிருக்கும் வெறுப்பும் ஊரறிந்தது. விகடன் அவ்வபோது செம்மையான தகவல்களை புட்டு புட்டு வைக்கிறது. ஆனால் அவையெல்லாம் புலனாய்வு செய்யப்பட்டு ரகசியமாகச் சேகரிக்கப்பட்டவை அல்ல. தொகுத்துச் சொல்லப்பட்டவை. பத்திரிக்கைகளின் இந்த அவலநிலைக்கு அரசியல் காரணங்கள், அவர்களது அரசியல் நிலைப்பாடுகள் தாண்டி டி.வி சேனல்களின் வருகையும் பிரதானமாகச் சொல்லப்பட்டாலும், ரிஸ்க் எடுத்து மக்களுக்கு உண்மையைச் சொல்ல இப்போதுள்ள பத்திரிக்கைகளும் மெனக்கெடுவதில்லை என்பது தான் உண்மை. கருத்துக்கணிப்பு போட்டதற்கே ஆபீஸைக்கொளுத்தினால் அவர்களும் என்ன செய்வார்கள் பாவம்.

மக்களும் - சங்கர்ராமன் கொலை வழக்கில் ஜெயேதிர சரஸ்வதி கைது செய்யப்பட்டாலும் உண்மையில் நடந்தது என்ன? ஆடிட்டர் ரமேஷ் விஷயத்தில் நடந்தது என்ன? டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தொடங்கி ஐ.பி.எஸ் அதிகாரிகள் தொடர்ந்து தூக்குமாட்டிக்கொள்வது ஏன்? திவ்யாவின் காதலன் இளவரசன் உண்மையில் தற்கொலை தான் செய்து கொண்டானா? நடிரோட்டில் வைத்து சங்கரை வெட்டியவர்கள் பின்னால் இருப்பது வெறும் ஜாதி வெறி மட்டும் தானா அல்லது ‘நீ வெட்ரா நான் இருக்கேன் உனக்கு’ என்று அந்த வெறிக்குத் தீனி போடும் அரசியல் கட்சிகளா? தினம் ஒரு ஆடியோ, அவ்வபோது வீடியோ அனுப்பிக்கொண்டிருந்த கோகுல்ராஜ் கொலைக்குற்றவாளி முறுக்குமீசை யுவராஜ் தாடிவளர்த்து தானாக முன் வந்து சரணடைவது வரை போலீஸார் ஏன் காத்திருந்தனர்? விழுப்புரம் கல்லூரிப்பெண்கள் மூவர் பிணமாக மிதந்ததன் பின்னணி என்ன? அந்தப் பிரச்சனை முடிவதற்குள் சாய்ராம் காலேஜில் ஒரு மாணவன் பிணமாக மிதக்கிறான். என்னதான் நடக்கிறது நம் ஊர் கல்லூரிகளில்? இந்த சாவுகளுக்கு யார் பொறுப்பு? அணு உலை, மீத்தேன், கெயில் குழாய் என்று மற்ற மாவட்டங்களில் எல்லாம் விரட்டியடிக்கப்படும் 'ப்ராஜெக்ட்'கள் வரிசையாக தமிழகத்திற்கு வருவதன் பின்னால் எத்தனை கோடி மோசடி உள்ளது? எத்தனை முறை என்ற கணக்கே மறந்துவிட்டது அத்தனை முறை தமிழக அமைச்சரவை மாறிக்கொண்டே இருப்பதன் பின்னணி என்ன? - இது எதையுமே நாமும் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. நாம் விரும்பும் அதிகபட்ச புலணாய்வுச் செய்தி, சிம்பு யாருடன் சேர்ந்து பீப் பாடல் எழுதினார், விஜய்காந்த் அடுத்து யாரை நாக்கைத் துறுத்தி அடித்தார், நம்பர் நடிகை வீட்டில் இருந்து வெளிவந்த வளர்ந்த மனிதர் யார் - அவ்வளவு தான்.


சிறுவர்கள் மீது ஏவப்படும் பாலியல் வன்கொடுமை இல்லாத இடமில்லை. பொதுமக்களிடம் வசமாக மாட்டி செம்ம அடிவாங்கிய 'ஆசிரியர்கள்' இங்கு எத்தனையோ பேர் இங்கு உண்டு. ஆனால் பாதிரியார்கள் என்பவர்கள் இந்தப் படத்தில் சொல்லப்படுவது போல - கடவுளுக்கு நெருக்கமானவர்கள். அனைத்தையும் இழந்தவர்கள் கடவுளே கதி என்று வந்து நிற்கும் போது, அவர்களுக்கு கடவுளாக, கடவுள் அனுப்பிய தூதுவனாகத் தெரிபவர்கள் இவர்களே. அமெரிக்க என்றல்ல, நம் தமிழகத்திலும் கூட எத்தனையோ பாதிரியார்கள் இப்படிப்பட்ட பிரச்சனைகளில் சிக்கியுள்ளனர் என்பது தான் வேதனையான செய்தி. 'மதம்' என்ற சட்டத்திற்குள் இந்தப் பிரச்சனையை சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை. 'இந்து' பூசாரிகள் கற்பகிரகத்திற்குள் செய்த லீலைகளையும் இலங்கை புத்தமதப்பிச்சுக்கள் தமிழர்கள் மீது ஏவிய வன்முறை பற்றியெல்லாம் கேள்விப்படும்பொழுது எப்படி அப்படிச் சொல்ல முடியும்.
நன்றி-- பேபி  ஆனந்தன்...